புதுச்சேரி வருகின்ற 2026-ஆம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடக்க விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் பெரிய இயக்கத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் நிறுவனரும் முதலமைச்சருமான ரங்கசாமி கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்து மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன் என் ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட சித்தர் மற்றும் சுவாமிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி துவக்க விழாவை முன்னிட்டு கட்சியின் மூத்த நிர்வாகிகள் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என பலரும் பங்கேற்றனர்.
தொடர்ந்து சிறப்புரை ஆற்றும் போது வருகின்ற 2026 ஆம் ஆண்டும் புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும், எல்லா தரப்பு மக்களுக்குமான அரசாக புதுச்சேரி அரசு செயலாற்றி வருவதாகவும் தெரிவித்த அவர் எதை அரசு அறிவிக்கின்றதோ அந்த திட்டங்களை அனைத்தையும் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழகத்திலும் என் ஆர் காங்கிரஸ் கட்சி தொடங்க வேண்டும் என பலரின் எண்ணமாக உள்ளது, வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என தெரிவித்தார்.