புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் சார்பில் வேளாண் விழா 2025 மற்றும் 35 – வது மலர், காய், 07.02.2025 முதல் 09.02.2025 வரை தாவரவியல் பூங்காவில் நடைபெறுகிறது. இதன் துவக்க விழா மாலை நடைபெற்றது.
இவ்விழாவில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ந. ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு வேளாண் விழா 2025 மற்றும் 35 – வது மலர், காய், கனிக்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.
சட்டப்பேரவைத் தலைவர் செல்வம். R, மாண்புமிகு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் க. ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, P.M.L.கல்யாணசுந்தரம், அரசுச் செயலர் (வேளாண்மை) A. நெடுஞ்செழியன் துறை இயக்குநர் சிவ. வசந்தகுமார் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
இக்கண்காட்சியில் புதுச்சேரி அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் உருவாக்கப்பட்ட மலர் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை காண வரும் பார்வையாளர்களை கவரும் விதமாக மலர்களால் பல்வேறு விலங்குகள், பறவைகள் போன்று தத்ரூபமாக உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் வீரிய காய்கறிகளின் ரகங்கள், வீரிய கனிகளின் ரகங்கள், வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் அரங்குகள், வேளாண் தொழில்நுட்ப கருத்தரங்குகள், மலர் ரங்கோலி, தோட்டக்கலை கருவிகள் மற்றும் உபகரணங்கள், பிரதான தோட்டக்கலை பொருட்கள் உற்பத்தியாளர்களின் விற்பனை அரங்குகள், இசை நடன நீரூற்று ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குழந்தைகளுக்காக சிறுவர் உல்லாச ரயிலும் இயக்கப்படுகிறது.
இந்த 35வது மலர், காய்கனி கண்காட்சி 7ம் தேதி (இன்று) முதல் வரும் 9ம் தேதி வரை நடக்கிறது. அதன்படி மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையும், 8ம், 9ம் தேதிகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை வேளாண்துறை அதிகாரிகள், ஊழியர்கள் செய்துள்ளனர்.