எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட சம்பா சாகுபடி.மறுசாகுபடி செய்து அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு.நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி, ஆளஞ்சேரி, அரூர், மருதங்குடி, அத்தியூர், ஆதமங்கலம், கோயில்பத்து உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் மேற்கண்ட கிராமங்களில் தாழ்வான பகுதியில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டும் கூடுதல் செலவு செய்து சம்பா சாகுபடி செய்த நிலையில் தற்போது நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
20 விவசாயிகள் அறுவடை செய்த 900 நெல் மூட்டைகளை நிம்மேலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 6ம் தேதி கொண்டு வந்து விற்பனைக்காக வைத்தனர். ஆனால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்வதை தமிழக அரசு ஏற்கனவே நிறுத்திவிட்டதாகவும் மேலும் விவசாயிகள் தற்போது கொண்டு வந்துள்ள நெல் தரம் குறைவாக இருப்பதாக கூறி நெல்லை கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனை தொடர்ந்து விவசாயிகள் கடந்த 20 நாட்களாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தங்களுடைய நெல்லை தாங்களே இரவு பகலாக பாதுகாத்து வருகின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஆகி வருகிறது. எனவே அரசு போர்க்கால அடிப்படையில் உடனடியாக விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து அதற்க்கான தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.