காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை கிராமத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் விவசாய இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான கல்வித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தகவல் தொடர்பு தொழில்நுட்பம், இணைய வலைப்பின்னல், சமூக ஊடகங்கள், மேன்படுத்தப்பட்ட மென்பொருள், அதிநவீன அலைபேசி சாதனங்கள் போன்றவற்றில் நிகழும் அபரிமிதமான வளர்ச்சியை பயன்படுத்தி வெகுவாக மாற்றம் அடைந்து வரும் செய்தி தொடர்பு தொழிலானது உழவர்களுக்கும், கூலித்தொழிலாளர்களுக்கும் மற்ற பங்கேற்பாளர்களுக்கும் உதவ வேளாண் ஊடகவியல் பயிற்சி விவசாயக் கல்லூரி மாணவ மாணவியருக்கு அவசியமாக தேவைப்படுகிறது.
எனவே, கடந்த 2023 ஆம் ஆண்டு வேளாண் இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியரில் 16 பேர் வேளாண் ஊடகவியல் பாடத் திட்டத்தை தேர்ந்தெடுத்து பயின்று வருகின்றனர்.
அக்கல்லூரியின் இணை பேராசிரியர் டாக்டர் எஸ். ஆனந்த்குமார் வேளாண் ஊடகவியல் பாடத்திட்டத்தை தலைமை தாங்கி மாணவ மாணவியரை வழி நடத்தி வருகிறார்.
அதன் ஒரு அங்கமாக காரைக்காலை அடுத்து உள்ள தமிழக பகுதியான நாகப்பட்டினத்தில் இருக்கும் பத்திரிகையாளர் மன்றத்தில் ஒரு நாள் பயிற்சி மேற்கொண்டனர்.
நாகை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவரும் சன் தொலைக்காட்சியின் நிருபருமான திரு. சகாதேவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்று, பிறகு ஊடக அறம், செய்தியாளர் வகைகள், தமிழக அரசால் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து கருத்துரைகள் வழங்கினார்.
தொடர்ந்து மொபைல் ஜெர்ணலிசம் பற்றி தந்தி டிவி நிருபர் திரு.ஶ்ரீதர், செய்தியாளர்களின் கடமைகள் மற்றும் அச்சு ஊடகம், காட்சி ஊடகம் வேறுபாடுகளை தூர்தர்ஷன் நிருபர் திரு.செல்வன் ஜெபராஜ், குற்ற செய்திகளில் செய்தியாளர்களின் பங்கு என்ன என்பதை மக்கள் டிவி நிருபர் திரு.காளிதாஸ், தினசரி பத்திரிகையாளர்களின் பணிகள், செய்தி சேகரித்தல், செய்தியாளர்களின் சமூக பொறுப்புகளை நியூஸ்7 தமிழ் நிருபர் திரு.கே.பார்த்திபன் ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த டாக்டர் எஸ். ஆனந்த்குமார் பேசுகையில், விவசாய துறையில் வேலை வாய்ப்புகள் பற்றாக்குறையாக இருக்கும் வேளையில் இப்பயிற்சி பெற்ற வேளாண் மாணவ மாணவியர் ஊடக துறையில் தொழில் தொடங்கி பயனடையலாம் என்றார்.
ஒவ்வொரு மாணவ மாணவியரும் பல்வேறு கோணங்களில் தனித்தனியே எழுப்பிய கேள்விகளுக்கு நாகை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் உரிய பதில் அளித்து சந்தேகங்களை தீர்த்து வைத்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் நியூஸ் 18 தொலைக்காட்சி நிருபர் பாலமுத்துமணி அனைவருக்கும் நன்றி உரைத்தார்.
மாணவர் லோகேஷ் நிகழ்ச்சியை ஆவணமாக்கினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவ மாணவியர் கீர்த்தனா, தனிக்கா, ஷகீல் கபோர், மற்றும் சிவானந்தம் செம்மையாக செய்திருந்தனர்.