திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல் நேற்று தமிழ் புத்தாண்டு முதல் நாளை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை 6 மணியளவில் அம்மன் ரிஷப வாகனத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது. இந்த தமிழ் புத்தாண்டு தினத்தன்று மண்டகப்படியை வருடந்தோறும் பாடகச்சேரி கிராமவாசிகள் சிறப்பாக செய்து வருவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் சிறப்பாக செய்திருந்தனர்.