மாதவரம் மூலக்கடையில் இருந்து மாதவரம் ரவுண்டானா செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலை தட்டான் குளம் கணபதி தோட்டம் சாலை சந்திப்பு அருகே இராட்சிதகுடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி ஆறாக ஓடியது.
தற்போது நெடுஞ்சாலையில்
ஆங்காங்கே ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சிறு சிறு பள்ளங்களை தோண்டி கேபிள் பதிக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மாதவரம் தட்டான் குளம் சாலை சந்திப்பு அருகே திடீரென குடிநீர் செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளிவரும் தண்ணீர் ஆறாக ஓடியது.
புழல் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பப்படும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் குபுகுபு என்று ஆறாக பாய்ந்து தெருவில் ஓடியது.
இதன் காரணமாக காலை நேரம் என்பதால் கல்லூரி செல்லும் வாகனங்கள் மற்றும் அவசர வேலையாக செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டதால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். மேலும் தண்ணீர் வெளியேறும் இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் சாலை வெடிக்கும் சூழ்நிலையில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை இயக்கும் காட்சியை நம்மால் காண முடிகிறது.
நெடுஞ்சாலையில் அவ்வப்போது இதுபோல் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனே குடிநீர் வாரியத்திற்கு தகவல் தெரிவித்தும் இரண்டு மணி நேரமாகியும் அலட்சியமாக கருதி அதனை சரி செய்ய ஊழியர்கள் யாரும் வராத காரணத்தினால் தண்ணீரும் வீணாகி தொழிற்சாலையில் போக்குவரத்தும் தடைப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோடைகாலத்தில் அவ்வப்போது நிகழும் இது போன்ற சம்பவங்களால் மக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் வீணாக சாக்கடையில் கலப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதியுறும் நிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.