தர்மபுரி மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. பகலில் வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் காணப்பட்டது. இதனால் பகலில் மக்கள் வியர்வை குளியலில் நனைந்தபடி பயணிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த வெப்பத்தை தணிக்க கோடை மழை பெய்யாதா? என மக்கள் ஏங்கி தவித்தனர். இதற்கிடையே பென்னாகரம், அரூர், பாலக்கோடு , உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. ஆனால் தர்மபுரி நகரில் மழை துளிகள் விழுவதற்கு தயங்கின. ஒருசில நாட்களில் கருமேகங்கள் சூழ்ந்த போதும், ஓரிரு துளிகள் மட்டுமே விழுந்தன. இது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இந்த நிலையில் இன்று பகலில் கடுமையான வெயில் கொளுத்தியது. மக்கள் வழக்கம் போல் வெப்பத்தில் வேதனையோடு நடமாடினர். இதற்கிடையே மாலையில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன. இதையடுத்து மாலை 5 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் அதுவே பலத்த மழையாக மாறியது. சுமார் 30 நிமிடங்கள் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் தொப்பூர் , நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பென்னாகரம், இலக்கியம்பட்டி, ஒட்டப்பட்டி, வாகன ஓட்டிகள் வாகனங்களில் லைடிகளை ஒளறிவிட்டவாறு சென்றனர். அதேநேரம் பகலில் கோடை வெயிலின் வெப்பத்தை வாட்டிய நிலையில், மாலை நேர மழை விரட்டியதால்,இரவில் இதமான குளிர் நிலவியது.