தாராபுரத்தில் ரம்ஜான் தொழுகை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
தாராபுரம்,
தமிழகத்தில் சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தாராபுரம் இறைச்சி மஸ்தான் இதுகா மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நேற்று பிறை தெரிந்ததை முன்னிட்டு இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுங்கம் அருகே அமைந்துள்ள இறைச்சி மஸ்தான் இதுகா மைதான திடலில் தொழுகை நடைபெற்றது.
முன்னதாக தாராபுரம் கடைவீதியில் இருந்து நடைபயணமாக வந்த ஏராளமான இஸ்லாமியர்கள் இறைச்சி மஸ்தான் இதுகா மைதானத்தில் உள்ள பெரிய பள்ளி வாசலில் தலைமை அஜரத் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.
சிறுவர் ,சிறுமிகள் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து வந்து உலக மக்கள் அமைதிக்காகவும் நாட்டு மக்கள் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர், கடந்த 30 நாட்கள் ரம்ஜான் நோன்பிருந்த இஸ்லாமியர்கள் இன்று ரமலான் சிறப்பு தொழுகையில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.அதோடு ஏழை எளியவர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் பிரியாணி வழங்கி ரம்ஜானை உற்சாகத்துடன் கொண்டாடினார்.