பசுமை புதுச்சேரி திட்டத்தின் கீழ் மணல் குன்றுகளை பாதுகாக்கும் வகையில் கடலோர பகுதிகளில் 226.35 ஏக்கர் நிலப்பரப்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை சபாநாயகர் செல்வம் மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தார்

புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை பசுமை புதுச்சேரி இயக்கத்தை தொடங்கியுள்ளது. அதன்படி ஒரு வீடு, ஒரு மரம், நகர்ப்புற தோட்டங்கள்,புனித தோப்புகளை மீட்டெடுப்பது, பசுமை பள்ளி வளாகம், பசுமைத் தொழில் மற்றும் பசுமை அலுவலக வளாகங்கள் என்ற கருத்துக்களை முன்னிலைப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மணல் குன்றுகளை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் கனகச்செட்டிக்குளம் முதல் மூர்த்திகுப்பம் கடலோரப்பகுதிகளில் உள்ள 226.35 ஏக்கர் பரப்பளவில் உள்ள மணல் குன்றுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 5000- மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான துவக்க நிகழ்வு சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான செல்வம் மரக்கன்றுகளை நட்டு வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மணல் குன்றுகளுக்கு ஏற்ற மர இனங்களான,முந்திரி, வேப்ப மரம், தென்னை, பின்னை மரம் மற்றும் மலைவேம்பு உள்ளிட்ட 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில்.. மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் திட்ட இயக்குனர் அருள்ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

Share this to your Friends