ANM & GNM நர்சிங் படிப்புகளுக்கு இந்த ஆண்டு பெரும் தேவை: மாணவியர்களிடம் வரவேற்பு அதிகம்
மருத்துவத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், குறைந்த கட்டணத்தில் பயிலக்கூடிய நர்சிங் டிப்ளமோ படிப்புகள், குறிப்பாக ANM (Auxiliary Nurse Midwifery) மற்றும் GNM (General Nursing and Midwifery) ஆகியவை மாணவியர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவியர்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில், இந்திய நர்சிங் கவுன்சில் (INC) மற்றும் மாநில நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்கத் தொடங்கி உள்ளனர். குறைந்த செலவில் மருத்துவம் சார்ந்த தொழில்நுட்ப அறிவைப் பெற்று, பட்டம் முடித்தவுடன் மருத்துவமனைகள், தனியார் க்ளினிக், சுகாதார மையங்கள் போன்றவைகளில் உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது இதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
சில மாணவியர்கள் தெரிவித்ததாவது, “B.Sc நர்சிங் போன்ற உயர் கல்விக்கு செலவுகள் அதிகம். ஆனால் ANM/DGNM போன்ற டிப்ளமோ படிப்புகள் குறைந்த செலவில் விரைவாக முடிந்து நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு தருகின்றன” எனத் தெரிவித்தனர்.
இந்த நர்சிங் படிப்புகள் மூலம், நாடு முழுவதும் அதிகரித்து வரும் மருத்துவ சேவைகள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திறமையான செவிலியர்களை உருவாக்கும் பணியில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக, இந்த ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புகளுக்கு மாணவியர்களிடையே வெகு பெரிய டிமாண்ட் உருவாகியுள்ளது.