காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை கிராமத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் விவசாய இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான கல்வித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு வேளாண் இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியரில் 16 பேர் வேளாண் ஊடகவியல் பாடத் திட்டத்தை தேர்ந்தெடுத்து பயின்று வருகின்றனர்.
அக்கல்லூரியின் இணை பேராசிரியர் டாக்டர் எஸ். ஆனந்த்குமார் வேளாண் ஊடகவியல் பாடத்திட்டத்தை தலைமை தாங்கி மாணவ மாணவியரை வழி நடத்தி வருகிறார்.
ஊடகவியல் பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக வேளாண் அலுவலர்களை நேர்காணல் செய்வது எப்படி என்ற பயிற்சி விவசாயக் கல்லூரி மாணவ மாணவியருக்கு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.
அத்தகைய கல்வி தேவையை பூர்த்தி செய்யும் விதமாக காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி கிராமம், ஒன்றாம் சமயா கார்டன் பகுதியில் இலக்கம் 40 எண் கொண்ட தற்சார்பு வீடு ஒன்றில் வசித்து சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு பங்காற்றிவரும் புதுச்சேரி அரசின் விவசாயம் மற்றும் உழவர் நல துறையின் வேளாண் அலுவலர் திருமதி அமினா பீபீ அவர்களை உரிய அலுவல் வழியில் தொடர்பு கொண்டு கூடுதல் வேளாண் இயக்குனர் திரு. ஆர்.கணேசன் அவர்களின் உத்தரவை தொடர்ந்து பஜன்கோவா கல்லூரியில் ஊடகவியல் பயிலும் 16 மாணவ மாணவியருக்கு அந்த வேளாண் அலுவலரை நேர்காணல் செய்வது எப்படி என்ற தனிவகையான பயிற்சி அளிக்கப்பட்டது.
திருமதி அமினா பீபீ பேசுகையில் மண்ணுக்கு பதிலாக மரவாடிகளில் மலிவாக கிடைக்கும் மரத்தூள் பயன்படுத்தி அதில் ரசாயன உரங்கள் இடாமல், வீட்டு காய்கறி கழிவு, உலர்ந்த இலைகள், மற்றும் மாட்டு சாணம் பயன்படுத்தி குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை தாமே இயற்கையாக உற்பத்தி செய்து கொள்வதாகவும் கூறினார்.
பிறகு , சூரிய சக்தியில் இருந்து மின்னாற்றல் உற்பத்தி செய்ய தனது வீட்டு மாடியில் சூரிய மின்கலம் அமைத்து சுமார் 1.5 கிலோ வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்சாரம் கட்டணத்தை 70 முதல் 80 சதவிதம் வரை குறைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், பருவநிலை சீற்றம் காரணமாக கடும் கோடை வெயில் மற்றும் தொடர் அதிகன மழையால் வீட்டின் மேல் தளம் பாதிக்கப்படாமல் இருக்கவும், மேலும், வீட்டிற்குள் சூரிய வெப்பம் மற்றும் மழை நீர் புகாதவாறு பிரத்தியேக ரசாயன பூச்சு தொழில்நுட்பம் பயன்படுத்தி செயற்கை குளிர் சாதன வசதியை தவிர்த்துள்ளதாக சொன்னார். அதுமட்டுமல்லாமல், அவர் இல்லத்தில் அமைத்துள்ள மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு பற்றி விளக்கினார்.
பிரமிக்க வைக்கும் அரிய பசுமை தொழில்நுட்பங்களை முன்னுதாரணமாக பயன்படுத்தி பிறர்க்கு ஊக்கம் அளிக்கும் விதமாக செயலாற்றி வரும் அந்த தனித்துவம் மிக்க வேளாண் அலுவலரிடம் இருந்து கூடுதல் தகவல் பெற ஊடகவியல் மாணவ மாணவியர் பல்வேறு கேள்விகள் எழுப்பி நேர்காணல் செய்து நேரடி களப்பணி அனுபவ பயிற்சி பெற்றனர்.
பிறகு டாக்டர் எஸ். அனந்த்குமார் பேசுகையில் நிருபர்களாக பணியாற்ற முனையும் மாணவ மாணவியர் அதிகாரி ஒருவர் தவறே செய்திருந்தாலும் அவர் வகிக்கும் பதவியின் மாண்பை மதித்து கண்ணியமான கேள்விகளை பணிவன்போடு கேட்டு பொதுநல நோக்கத்தோடு நேர்காணல் செய்வது ஊடக அறம் என்றார்.
முன்னதாக மாணவி கீர்த்தனா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர் பரத்குமார் நன்றியுரைத்தார்.
மாணவர் துளசிராஜ் நிகழ்ச்சியை ஆவணமாக்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவ மாணவியர் புவனேஸ்வரி, அபர்ணா, சுதர்சனன், மற்றும் ஆதவன் செய்திருந்தனர்.