திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கள்ளர் தெரு, வெள்ளாளர் தெரு ஸ்ரீ குளுந்தாளம்மன் ( எ) பிடாரி அம்மனுக்கு வருடந்தோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் கடந்த 06- ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
மதியம் 12- மணிக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 6- மணியளவில் குடமுருட்டி ஆற்றில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் மற்றும் வானவேடிக்கையுடன் அம்மன் வீதியுலா காட்சியும் நடைபெற்றது. அன்று முதல் தினசரி அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்று வந்தது. 7- ஆம் நாள் கடந்த திங்கட்கிழமை மாலை ஆலயத்தின் முன்புறம் முன்னோட்டம், பின்னோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று 8-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் தீபாராதனையும் நடைபெற்று அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளி ஜெண்டை மேளம், வானவேடிக்கையுடன் வீதியுலா காட்சி நேற்று, இன்று புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் தேரோட்டம் நடைபெற்று இரவு ஆலயத்தை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முக்கியஸ்தர்கள், தெரு வாசிகள் கெளரவிப்பு நடைபெற்றது. நாளை வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கள்ளர் தெருவாசிகள், வெள்ளாளர் தெரு வாசிகள், அங்காளம்மன் கோவில் தெரு வாசிகள், வரதர்குளத்தெருவாசிகள் மற்றும் வலங்கைமான் நகர வாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இவ்வாலயத்தில் மாதந்தோறும் பெளர்ணமி அன்று மாலை 7 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.