மயிலாடுதுறை செய்தியாளர்
இரா.மோகன்
மயிலாடுதுறை அருகே கீழையூர்,பொன்செய்,கிடாரம்கொண்டான் கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ள நிலையில், நேற்று இரவு திடீரென அடித்த சூறாவளி காற்று மற்றும் மழையின் காரணமாக இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடை செய்ய தயாராக இருந்த சுமார் 100 ஏக்கர் வாழை முறிந்தும், அடியோடு வயலில் சாய்ந்தும் சேதம்:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் கீழையூர், பொன்செய், கிடாரங்கொண்டான் செம்பதனிருப்பு, பள்ளக்கொள்ளை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக கீழையூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென சூறாவளி காற்றை போன்ற பலமான காற்று வீசியது.
அதைத்தொடர்ந்து அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் பகுதியில் சுமார் 38 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதன் காரணமாக கீழையூர் கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 100 ஏக்கர் வாழை பயிர்கள் முறிந்தும், அடியோடு சாய்ந்தும் வயலில் விழுந்தன. ஒரு வருட பயிரான வாழை பயிரை சுமார் பத்து மாதங்கள் கட்டிக் காப்பாற்றிய நிலையில், இன்னும் இரண்டே மாதங்களில் அறுவடை செய்ய தயாராக இருந்த வாழைப்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வாழைக்கால காப்பீட்டு பிரீமியம் செலுத்தியுள்ள நிலையில் உடனடியாக இழப்பீட்டு தொகை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் வாழை விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.