வலங்கைமான் அருகே உள்ள ஆண்டாங்கோயில் சுவர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
வரலாற்றுச் சிறப்பும் தொன்மையும் வாய்ந்த திருக்கோயில்கள், ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் பாடிப் புகழப் பெற்ற திருக்கோயில்கள், பிரார்த்தனை முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்கள், கிராமப்புறங்களில் அமைந்துள்ள சிறு திருக்கோயில்கள்,
ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளிலுள்ள சிறுசிறு திருக்கோயில்கள் ஆகிய பல்வேறு புனிதமான திருக்கோயில்கள் தமிழ் நாட்டில் உள்ளன. இவற்றினை திருப்பணி செய்து புதுப்பிக்கும் இன்றியமையாத பணியினை
பொதுமக்கள் அளிக்கும் நன்கொடை, திருக்கோயில்களின் சொந்த நிதி, நிதிமாற்ற நிதி, அரசு மானியம், பொதுநல நிதி, ஆலய மேம்பாட்டு நிதி, கிராமப் புறத் திருக்கோயில்கள் திருப்பணி நிதி, திருக்கோயில் திருப்பணி மற்றும் அறப்பணி நிதி, உபயத் திருப்பணி நிதி, ஆணைய மானியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளிலுள்ள திருக் கோயில்களுக்கான திருப்பணி நிதி, சுற்றுலா துறை நிதி ஆகிய நிதிகள் மூலம் இந்து சமய அறநிலையத் துறை திருப்பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்கள் அடையாளங் காணப்பட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மேலவிடையல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டாங்கோயில் கிராமத்தில் சுவர்ணபுரீஸ்வரர் கோயில் உள்ளது.
சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த இக் கோயில் கடந்த 14 – ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி இந்து சமய அறநிலையத்துறை ஆணைய பொது நிதியிலிருந்து ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறைக்கு பக்தர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.