விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த வேட்டக்குடி கிராமத்தில் பிரணவ நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் நீலகண்ட யாழ்பாணர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் சித்ரா பௌர்ணமி பெருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீப ஆராதனைகள், சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
கடந்த 20 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது. காலையில் பிரணவ நாயகி உடனுறை பிரகதீஸ்வரருக்கு பால் தயிர் இளநீர் பன்னீர் தேன் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
அதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள பக்தர்கள் தேரினை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நாளை சண்டிகேஸ்வரர் உற்சவமும், நாளை மறுநாள் 28ஆம் தேதி தாலாட்டு நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.