பா வடிவேல் அரியலூர் மாவட்ட செய்தியாளர்
பெரம்பலூர் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கி வரும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், தினசரி ஏலத் திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்கின்றது. தினசரி சுமார் 750 முதல் 1000 விவசாயிகள் வரை தங்களது விவசாய விளைபொருட்களை இக்கூடத்தில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு ஏலங்கள் முழுமையாக தேசிய வேளாண் சந்தை முறை (e-NAM) மூலம் நடைபெற்று வருகின்றன இந்த அமைப்பின் சிறப்பம்சம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பது என்றாலும், இணையதள சேவையில் ஏற்படும் இடைக்கால கோளாறுகள், விவசாயிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை மற்றும் வியாபாரிகளின் பல்வேறு கோரிக்கைகள் ஆகியவை நிர்வாகத்தின் கவனத்தில் கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில், இந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக முன் அனுமதி (டோக்கன்) முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறை 2025 ஏப்ரல் 23 (புதன் கிழமை) முதல் நடைமுறைக்கு வரும்.
விவசாயிகள் செய்யவேண்டியது:
அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் மாலை 03:00 மணிக்கு ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு நேரில் வரவேண்டும் அப்போது தங்களுக்கு தேவையான நாளுக்கான டோக்கனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் தங்களது விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்ய வேண்டும்.
இந்த முறை மூலமாக, தினசரி வருகை செய்வோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, இணைய சேவையினால் ஏற்படும் தாமதங்களை குறைத்து, அனைவரும் சீரான முறையில் பயனடைய வழி வகுக்கப்படும் என ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கு. ஆரோக்கியசாமி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.