வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில், நடப்பு நிதியாண்டில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 322 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட உள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதிச்ச மங்கலம், மாணிக்கமங்கலம், அரித்துவாரமங்கலம், வீரமங்கலம், திருவோணமங்கலம் உள்ளிட்ட 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவ் ஊராட்சிகளில் தகுதியான 321 பயனாளிகள் கடந்த நிதியாண்டில் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான நிர்வாக அனுமதி முன்னதாக வழங்கப்பட்ட நிலையில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகள் வீடு கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் கட்டுமான பணியினை தடையின்றி விரைவாக செய்திட ஏதுவாக கம்பி மற்றும் சிமெண்ட் ஆகியவை தமிழக அரசால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயனாளிகள் வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்க பெரும் உதவியாக இருப்பதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நடப்பு 2025 – 2026 ஆம் நிதியாண்டில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் தகுதி பெறும் பயனாளிகளாக 322 பயனாளிகள் முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. முன்னதாக அடையாளம் காணப்பட்ட பயனாளிகள் பட்டியல் கடந்த 29ஆம் தேதி கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகள் விரைவில் வீடு கட்டும் பணி தொடங்குவதற்கு நிர்வாக அனுமதி ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது.