கோவையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தேவேந்திர வீதியில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உள்ளது.இக்கோவிலில் 30 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணி செய்யாமல் மிகவும் சிதிலமடைந்து இருந்துள்ளது.இக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு தலைவர் மனோகரன் சார்பில் இந்து சமய அறநிலையத்துறையில் பழைய திருக்கோவிலை அகற்றி புதிய திருக்கோயில் திருப்பணிக்கான முழு உத்தரவுகள் பெறப்பட்டது.
மேலும் திருப்பணிகளின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை நடைபெறாமல் இருக்க , காவல்துறை பாதுகாப்பு வழங்கிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு திருக்கோயில் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் திமுக பிரமுகர் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலர் பாலாலயம் நடைபெறுவதை தடுத்து நிறுத்தினர்.இதனால் அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து கோவிலில் பாலாலயம் நடத்த வேண்டும் என கோவில் வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி பாலாலயம் நிகழ்வு நடைபெற்றது.
நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி ஒரு சிலர் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.