ஏமப்பூர் ஸ்ரீ வேதபுரீசுவரர் கோயிலில் சோழர் காலத்து11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டு துண்டுக்கல்வெட்டுகள் கண்டெடுப்பு!
திருவெண்ணைநல்லூர்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ள ஏமப்பூரில் ஸ்ரீ பாலகுஜாம்பாள் உடனுறை வேதபுரீசுவரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதியின் அதிட்டானப் பகுதியில் 11 ஆம் நூற்றாண்டு துண்டுகல்வெட்டுகளும்,அம்மன் சன்னதியின் தென் பகுதியில் விரித்த குமுதம்,மற்றும் உபபீடத்தில் 13 ஆம் நூற்றாண்டு துண்டுக் கல்வெட்டுகளும் கண்டுபிடிப்பு.
திருக்கோவலூரில் உள்ள கள்ளக்குறிச்சி வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் அதன் தலைவர் வரலாற்று ஆய்வாளர் சிங்கார உதியன் தலைமையில் கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், நல்நூலகர் மு.அன்பழகன் ஆகியோர் கோயில் செயல் அலுவலர் வை.அறிவழகன், சமூக சேவசர் ரமணி ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் வட்டம், ஏமப்பூர் கிராமத்தில் வேதபுரீசுவரர் கோயில் உள்ளது. இக்கோயில் சிதிலமடைந்திருந்த நிலையில் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் சார்பில் குடமுழுக்கு செய்வதற்காக தரைத் தளங்களை சரி செய்த போது, ஏற்கனவே சிதைந்த நிலையில் இருந்த பரிவார முருகன் சன்னதியின் அதிட்டானப் பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழனின் மெய்க்கீர்த்தியோடு, இக்கோவிலுக்கு வழிபாட்டிற்காக 105 மஞ்சாடி பொன் தானம் கொடுத்ததைப் பற்றி அறியமுடிகிறது.
இது 11 ஆம் நூற்றாண்டிற் குரியதாகும்.
அடுத்துள்ள ஸ்ரீபால குஜாம்பாள் அம்மன் ஆலயத்தின் சுற்றுச்சுவரில் உள்ள தென் உபபீடத்தில் கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது இது சிதைந்த நிலையில் இருந்தது மட்டுமின்றி, இடம்பெயர்ந்தும், கலைந்தும் இருந்தது. நிறைய சாந்து பூச்சுகள் இருந்ததால் சரிவர படிக்க முடியவில்லை. .
சிதைந்ததிலிருந்து அறியப்படும் சொற்கள் இதற்கு முன்பு எப்பொழுதோ நடந்த திருப்பணியின் போது கலைந்த நிலையில் அடுக்கப்பட்டிருக்கலாம்.
சோழர்களுக்கே உரித்தான மெய்க்கீர்த்திகள் ராஜகேசரி, பரகேசரி ஆகும். இந்தக் கல்வெட்டில் கோ ராசகேசரி என்ற சொல் வருவதாலும், இதில் திரு ஆளந்துறையுடைய நாயனார்க்கு இறையிலியாக (வரி நீக்கி) நில தானம் கொடுக்கப்பட்டதையும், எல்லையைக்குறிக்கும் சொற்களும் காணப்படுகிறது.
எனவே இச்சொற்களைக் கொண்டு சோழர் காலத்து கி.பி. 13 ஆம் நூற்றாண்டு கால கல்வெட்டு என்பதை அறியமுடிகிறது.
மேலும் இப்பகுதியில் தொன்மையான வரலாற்றுத் தடயங்கள் நிறையக் காணப்படுகிறது, ஆகவே தொடந்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார் கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன். இவ்வாய்வுப் பணியின் போது நூலகர் பாரதிதாசன், எழுத்தாளர் திருமாவளவன் உள்பட ஊர்ப் பொதுமக்கள் பலரும் உடனிருந்தனர்.