வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி ஆலயத்தில் கடந்த மாதம் 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பூச்செறிதல் விழாவுடன் பங்குனிபெருந்திருவிழா தொடங்கியது.
கடந்த 02- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 09- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் காப்பு கட்டுதலும், அதனைத் தொடர்ந்து அன்று முதல் தினசரி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சியும் நடைபெற்று, கடந்த 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குனி பெருந்திருவிழாவும் நடைபெற்றது. 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், தீபாராதனையும் நடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
மாலை அம்மன் அலங்காரத்தில் புஷ்பப் பல்லக்கில் வீதி உலா காட்சி நடைபெற்றது. அது சமயம் புகழ்பெற்ற நாதஸ்வர, தவில் வித்வான்களின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி உடன் வலம் வந்தது. புஷ்ப பல்லக்கு மறுநாள் 24-ஆம் தேதி திங்கட்கிழமை காலை ஆலயம் வந்தடைந்தது. அதனை தொடர்ந்து ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஆலய தக்கார் கோ. கிருஷ்ணகுமார், ஆய்வாளர் க.மும்மூர்த்தி, செட்டித் தெரு நிர்வாகிகள், செட்டித்தெருவாசிகள், ஸ்ரீ சீதளாதேவி இளைஞர் நற்பணி மன்றம், மண்டகப்படி தாரர்கள் மற்றும் நகரவாசிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.