திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் அறநிலையத் துறைக்கு சொந்தமான குளங்கள், கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான குளங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.
இவை நீங்களாக பல்வேறு காலகட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை மூலம் 100% மானியத்தில் நிலத்தடி நீரை பாதுகாத்திடவும், மீன் வளர்ப்பு செய்து வருவாய் ஈட்டிடும் வகையில் பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கெழுத்தி, ரோகு, கட்லா, சில்வர் கெண்டை, புல் கெண்டை, விரால், மிர் கால் ஆகிய ரகங்கள் அதிக அளவில் வளர்க் கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவேரி நீர்வரத்து குறைவு, போதிய பருவமழை இல்லாதது போன்றவற்றால் இப்பகுதி நீர்நிலைகள் நிரம்ப வில்லை.
இதன் காரணமாக வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் மீன்கள் வளர்ப்பு பாதிப்படைந்தது. இந்நிலையில் வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலய பாடைக் காவடி திருவிழா விற்கு மறுநாள் மீன் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இவ்விழாவில் வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களில் இருந்து பிடித்து வரப்பட்ட வளர்ப்பு மீன்களை வியாபாரிகள் விற்பனை செய்வர். மீன் திருவிழா அன்று மட்டும் பல டன் மீன் விற்பனை செய்யப்படும்.
இந்நிலையில் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலய பாடைக் காவடி திருவிழா நேற்று முன் தினம் நடைபெற்றது. இதை அடுத்து நேற்று நடைபெற்ற வீண் திருவிழாவில் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் வளர்க்கப்பட்ட வளர்ப்பு மீன் அதிக அளவில் விற்பனைக்கு வரவில்லை.
குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பாததால் வளர்ப்பு மீன் வருகை குறைந்தது. இதன் காரணமாக நேற்று நடைபெற்ற மீன் திருவிழாவில் கெண்டை மீன் கிலோ ரூபாய் 200 முதல் 240 வரை விற்பனையானது. விரால் மீன் கிலோ ரூபாய் 600 முதல் 750 வரை விற்பனை செய்யப்பட்டது.