காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் அமைக்க கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த நிலையில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில் அதற்கான நிதி ஒதுக்கீடு தற்போது வரை செய்யப்படவில்லை.
22 நீதிமன்றங்கள் இருக்க வேண்டிய நிலையில் 7 நீதிமன்றங்கள் மட்டுமே உள்ளது. மேலும் வழக்கறிஞர்கள் வழக்காடிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் இல்லை.
இவை அனைத்தையும் நிறைவேற்றக் கோரி காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கடந்த வாரம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் திடீர் சாலை மறியலில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் இன்று காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் அடுத்த கட்ட ஆலோசனைகள் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் , தொடர்ந்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் தமிழக முழுவதும் உள்ள விடுபட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் கட்ட அரசு முன்வர வேண்டும் எனவும், அதை காலம் தாழ்த்தும் நிலையில் ஓர் நாள் தமிழக மற்றும் புதுச்சேரி கூட்டமைப்பில் உள்ள வழக்கறிஞர்கள் ஒட்டுமொத்த புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் எனவும்,
அதே வேளையில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவிகளை நாடி தமிழக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்க கோரிக்கை வைக்க உள்ளதாகவும் அதன் அடிப்படையில் நேரடியாக முதல்வரை சந்தித்து உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கார்த்திகேயன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் இ.எல்.கண்ணன், திருப்பதிமுரளி கிருஷ்ணன் , சிவகோபு மற்றும் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர்கள், வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.