மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரத்தன்று மாசிமக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இன்று மார்ச் 12 ம் தேதி புதன்கிழமை மாசி மகம் அமைகிறது. அதிகாலை 03.53 மணி துவங்கி, மார்ச் 13ம் தேதி காலை 05.09 வரை மகம் நட்சத்திரம் உள்ளது. அதே போல் மார்ச் 12ம் தேதி காலை10.50 மணி துவங்கி சதுர்த்தசி திதி உள்ளதால் சிவ வழிபாடு செய்வது மிக உகந்தது. சதுர்த்தசி, சிவனுக்குரிய திதி ஆகும்.

இந்த திதியில் வழிபடுபவர்களுக்கு சிவ பெருமானின் அருளும், பாவங்களில் இருந்து விடுதலையும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை இல்லாத தம்பதிகள் மாசி மகம் அன்று புனித நீராடினால் அவர்களுககு குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த மாசி மகம் நாளில் ஜென்ம பாவங்கள் தீர்க்கும் கும்பகோணம் மகாமகம் குளம் கடல், நதிகள், கோவில் குளங்களில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர், சோமசுந்தரி சமேத வியாழ சோமேஸ்வரர், அமிர்தவல்லி சமேத அபிமுகேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், ஞானாம் பிகா சமேத காளஹஸ் தீஸ்வரர், சவுந்தரநாயகி சமேத கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோவில்களில் மாசிமக தீர்த்தவாரி பெருவிழா
கடந்த 3ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் யானை, காமதேனு, குதிரை, கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வந்தது. விழாவில் 5-ம் நாள் ஓலைச்சப்பரமும், 7-ம் நாள் திருக்கல்யாணமும், 9-ம் நாள் தேரோட்டமும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. விழாவை யொட்டி மேற்கண்ட 12 சிவன் கோவில்களில் இருந்து சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பட்டு, ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் 4 கரைகளில் எழுந்தருளினர்.

பின்னர், மகாமக குளபடித்துறையில் அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குளத்தில் இறங்கி புனித நீராடினர். பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் குளத்தின் 4 கரைகளிலும் சுற்றிவந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக இன்று அதிகாலை முதலே பக்தர்கள் அதிக அளவில் திரண்டு மகாமக குளக்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து புனித நீராடி வழிபட்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *