திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜபேட்டை தெருவில் மகாமாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் சக்தி தலங்களின் தலைசிறந்த ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை புகழ்பெற்ற பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இவ்வாண்டு வருகின்ற மார்ச் 23-ஆம் தேதி பாடைக் காவடி திருவிழா நடைபெறுகிறது.

அதனை முன்னிட்டு கடந்த 5-ஆம் தேதி புதன்கிழமை மதியம் 12 மணி அளவில் ஸ்ரீ வன தேவதை அம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிர சாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நேற்று 7- ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு கணபதி ஹோமமும், சக்தி ஹோம வழிபாடும், தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று, பகல் ஒரு மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 6:00 மணிக்கு வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு ஸ்ரீ வரதராஜ கணபதி ஆலயத்தின் அருகில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட அம்பாள் திருவுருவப்படம் வீதி உலா காட்சியை ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி, விழா மண்டகப்படிதாரர்கள் வரதராஜன் பேட்டை தெருவாசிகள் நலச் சங்கத்தினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஆகியோர் துவக்கி வைத்து, சிறப்பு நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியோடு நடுநார சம் ரோடு, வடக்கு அக்ரஹாரம், கடைத்தெரு, காளியம்மன் கோவில், கும்பகோணம் ரோடு வழியாக ஆலயத்தை வந்தடைந்து, ஆலயத்தில் அம்மனுக்கு பூச்செரிதல் விழா நடைபெற்றது.

அதனை தொடர்ந்துபக்தர்களுக்கு அருட்பிர சாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு நறுமண மலர்களை வழங்கினர். கணபதி ஹோமம், சக்தி ஹோமம் வழிபாடுகளை திப்பிராஜபுரம் டாக்டர் சிவஸ்ரீ சுரேஷ் என்கிற ஜே. வெங்கடேச சிவாச்சாரியார், ஆலய அர்ச்சகர்கள் இரா. சங்கரன் பூசாரியார், செ. ஸ்ரீ ராம மணிகண்டன் பூசாரியார் சிறப்பாக செய்து இருந்தனர்.

பூச்செரிதல் விழாவை மண்டகப்படிதாரர்கள் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவாசிகள் நலச்சங்கம், இளைஞர் நற்பணி மன்றம் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர். நாளை 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் காப்பு கட்டுதலும், 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் காப்பு கட்டுதலும், அன்று முதல் தினசரி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சியும், வருகின்ற 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புகழ்பெற்ற பாடைக்காவடி திருவிழா, அதனைத் தொடர்ந்து 30- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புஷ்ப பல்லக்கு விழாவும் நடைபெறுகிறது.

பங்குனி பெருந்திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி, ஆலய அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், விழா ஏற்பாட்டு உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Share this to your Friends