எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே திருக்கருக்காவூர் கிராமத்தில் மயான கொட்டகை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு. சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருக்கருக்காவூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டில் மயான கொட்டையை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க பல ஆண்டுகளாக கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதே நேரம் சுற்றுச்சுவர் அமைப்பதை ஒரு சமூகத்தினர் எதிர்த்து வருகின்றனர். இதனால் இரு தரப்பினரிடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் துவங்கிய போது அதனை ஒருசமூகத்தினர் தடுத்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து திருக்கருக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுற்றுச்சுவர் அமைக்க கோரி மயான கொட்டகை அருகே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்ற போது சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்டோர் கடவாசல் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழி- திருமுல்லைவாசல் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரேசன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
விரைவில் இருதரப்பினர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் உரிய தீர்வு காணப்படும் என அவர் அளித்தார்.அதனை ஏற்று கிராமமக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.