விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்கள் இருப்பதை காணமுடிகிறது: மகளிர் தின நிகழ்ச்சியில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

சென்னை கௌரிவாக்கத்தில் உள்ள பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சிநடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

கல்லூரி விழாவில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி; இந்த நிகழ்வில் ஆண்களை விடப் பெண்கள் அதிக அளவில் இருப்பதை காணமுடிகிறது. சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் சரிசமமாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருந்தால் சந்தோசமாக இருக்கும். ஆனால்,விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்கள் இருப்பதை காணமுடிகிறது.

உழைப்பாளர் தினம் போலத்தான் மகளிர் தினத்தையும் நாம் காணவேண்டும். மகளிர் தினம் என்பது பெண்களுடைய உரிமை பற்றி பேசக்கூடிய நாள். பெண்களின் கைகளில் இருக்க கூடிய கரண்டையை பிண்டிக்கிவிட்டு, அவர்களின் கைகளில் புத்தகங்களை கொடுத்து விடுங்கள். எல்லாம் மாறிவிடும், அதுதான் மகளிர் காண உண்மையான தினம் என்று தந்தை பெரியார் சொன்னார். மேலும், படித்த பெண்கள் இந்த சமூகத்திற்கு எதுவும் செய்யாமல், குடும்பத்திற்கு அடங்கிப் போவது என்பது மிகப் பெரிய தவறு என்று சொன்னார்.

பெரியாரின் வழியில் திராவிட கட்சிகள் ஆட்சி பொறுப்புக்கு வந்தபிறகு, உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வடிவும் அமைத்தார் பேரறிஞர் அண்ணா. அதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி மற்றும் முக்கிய இடங்களின் அரசு கலைக் கல்லூரி என கலைஞர் தொடங்கினர்.

கலைஞர் ஆட்சிக்காலத்தில், பெண்கள் பத்தாம் வகுப்பு வரை படித்தால் திருமண உதவித் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், அது உண்மையில் கல்வி உதவி திட்டம். தமிழ்நாட்டில் சிறிய ஊர்களிலும் கூட கல்லூரிகள் இருக்கின்றது.

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை 50% சதவீதம் எட்டிவிடுவார்கள் என்று ஒன்றிய அரசாங்கம் சொல்கிறது. ஆனால், ஒன்றிய அரசு சொல்லக்கூடிய இலக்கை, நாம் தமிழ்நாடு கடந்து விட்டது. இதற்கு காரணம் தமிழ்நாட்டில் உயர்கல்வி பரவலாக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் 42% சதவீத பெண்கள் வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்ற பெருமையை நாம் பெற்றுள்ளது. படிப்புக்காக, அரசு கல்லூரி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் புதுமை பெண் திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாயை முதலமைச்சர் வழங்கிக்கொண்டு இருக்கின்றார். மேலும், மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாயை தமிழ் புதல்வன் திட்டத்தின் வழியாக வழங்கப்பட்டு வருகிறது.

நான் முதல்வன் திட்டம் மூலமாக படிப்புக்கு ஏற்ப வேலை வழங்கப்படுகிறது. அரசின் திட்டங்களை மாணவ – மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஒருகாலத்தில் நம்முடைய பெற்றோர்கள் எத்தனை பேர் பட்டதாரிகளாக இருந்தார்கள்? என்னுடைய பெற்றோர்கள் கூட பட்டதாரிகள் இல்லை.

இன்னும் 10 வருடம் கடந்து, கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் சென்று தங்களின் பெற்றோர்கள் பட்டதாரிகளா என்று கேட்டல், 80% சதவீதம் மேல் ஆம் என்று சொல்லக்கூடிய நிலையில் தான் தமிழ்நாடு இருக்கும்.

ஒரு காலத்தில், மருத்துவம் கல்லூரியில் படிக்க வேண்டும் என்று நினைத்தால் சமஸ்கிருதம் தெரிந்தால் தான் படிக்க முடியும். ஆனால், மருந்தின் பெயரைக் கேட்டல் லத்தீன், கிரேக்க மொழிகளில் இருக்கும். நீதிக் கட்சியின் ஆட்சியில் சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை மாற்றப்பட்டது. பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் நம்மை 50 வருடம் முன்பு கொண்டுசென்று விடுவார்கள்.

நிறைய ஆண்களுக்கு அக்கா, தங்கை பாதுகாக்கும் கடமை இருப்பதாக சொல்கிறார்கள். பெண்களின் வாழ்க்கைக்கு அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளட்டும். பெண்கள் கனவுகளை அடைய ஆண்கள் உறுதுணையாக இருங்கள். ஒருவருக்கொருவர் மரியாதை கொடுங்கள், ஒன்றாக முன்னேறுங்கள், இந்த உலகத்தை இருவரும் சமமாக மாற்றுவோம் என்று பேசினார்.

இந்த விழாவில், சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மயிலை த.வேலு எம்.எல்.ஏ., கல்லூரியின் தலைவர் வாசுதேவன், கல்லூரியின் முதல்வர் கல்பனா, கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share this to your Friends