கோவை
20 ஆண்டுகளுக்கு பிறகு போடபட்ட சாலை – கவுன்சிலருக்கு விருந்து உபசரிப்பு விழா வைத்து மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்…
கோவையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு போடப்பட்ட சாலையால் மக்கள் மகிழ்ச்சியடைந்து கவுன்சலருக்கு விருந்து உபசரிப்பு விழா நடத்தி காண்போரை வியப்படைய செய்துள்ளனர்.
தமிழகத்தில் சில ஆண்டுகளாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் என்பது இல்லாததால் மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு கவுன்சிலர்கள் மூலம் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகிறது.
இதனிடைய கோவை மாநகராட்சி 84 வது வார்டுக்கு உட்பட்ட கரும்புகடை பாத்திமா நகர் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி அடைந்து வந்துள்ளனர்.
சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் மழைக்காலங்களில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிரமத்திற்கு உள்ளாகி வந்துள்ளனர்.
இதனை கருத்தில் மாநகராட்சி பெண் கவுன்சிலர் அலீமா ராஜாஉசேன் தனது சீரிய முயற்சியால், 20 ஆண்டுகளுக்கு பிறகு கான்கிரீட் சாலை மற்றும் வடிகால் வசதியை ஏற்படுத்திக் கொடுத்து அந்தப் பகுதி மக்களின் மனதில் ஒளியேற்றி வைத்துள்ளார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து கவுன்சிலருக்கு விருந்து உபசரிப்பு விழா மற்றும் பாராட்டு விழா நடத்தி நன்றிகளை தெரிவித்தனர்.
பல வருடங்களாக பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் கிடைக்காமல் இருந்தது.அதே போல தங்களுக்கு சாலை கிடைக்குமா என ஏக்கத்தில் இருந்த எங்களது கனவை பெண் கவுன்சிலர் நனவாக்கி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.