கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வு (என்.எம்.எம்‌.எஸ்) நடைபெற்றது. இத்தேர்வில் கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 462 பேர் தேர்வு எழுதினார்கள். இத்தேர்வினை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வினை புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) செந்தில் பார்வையிட்டார்.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கண்காணிப்பாளராக குளத்தூர் நாயக்கர் பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, துறை அலுவலராக பட்டதாரி ஆசிரியர் சிவசங்கரன், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கண்காணிப்பாளராக கோமாபுரம் கணித பட்டதாரி ஆசிரியர் முனிய்யா, துறை அலுவலராக டேவிட் ஆரோக்கியராஜ் செயல்பட்டனர்.

தேர்வில் தேர்வு அறை கண்காணிப்பாளராக ஆசிரியர்கள் செயல்பட்டனர். தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா வாழ்த்து தெரிவித்து பேசும்பொழுது
தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது மனத் திறன் தேர்வு, படிப்பறிவுத் திறன் தேர்வு எனும் இரண்டு பகுதிகளை கொண்டது. மனத் திறன் தேர்வில் முழுவதுமாக கணித அறிவை பரிசோதிக்கும் வகையில் வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.

படிப்பறிவுத்திறன் தேர்வில் மாணவர்களின் பாடப் பகுதியில் அறிவியல், சமூக அறிவியல் கணிதம் உள்ளிட்ட பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் இடம் பெற்றிருக்கும். எட்டாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களுக்கு நடத்தப்படக்கூடிய தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் . தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரும் சிறப்பாக தேர்வு எழுதுமாறு அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் கூறும் பொழுது மனத்திறன் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாகவும், படிப்பறிவுத் திறன் தேர்வில் ஒரு சில வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தனர். என் எம் எம் எஸ் தேர்வு எழுதுவது எங்களுக்கு எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.

Share this to your Friends