விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் கந்த சஷ்டி உள்ளிட்ட விசேஷ தினங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் சிறப்பு விழாக்களும் நடைபெறும்.
இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் முக்கிய விழாவாக மாசி மகத் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மாசி மக திருவிழா வருகின்ற மார்ச் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள விநாயகரின் இரண்டாம் படை வீடான ஆழத்து விநாயகர் கோவிலுக்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
நேற்று ஆழத்து விநாயகருக்கு கொடியேற்றம் நடந்தது. முன்னதாக விநாயகருக்கு பால் தயிர் இளநீர் பன்னீர் தேன் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடக்க சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆழத்து விநாயகர் கோவிலை வலம் வந்து கொடி மரத்தின் முன்பு எழுந்தருள, கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கொடியேற்றம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து வருகின்ற மார்ச்.1ந் தேதி ஆழத்து விநாயகர் தேரோட்டமும், 2 ந் தேதி ஆழத்து விநாயகருக்கு தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெற உள்ளது. தொடர்ந்து வருகின்ற மார்ச் 3ந் தேதி விருத்தகிரிஸ்வரர் கோவில் மாசி மக திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 8 ந் தேதி சனிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மேல் 6ந் திருவிழாவாக விபத்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக திருவிழாவும், 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 4:30 மணிக்கு மேல் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டமும் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 12 ந் தேதி மாசி மக தீர்த்த வாரி திருவிழாவும், 13ஆம் தேதி தெப்பத் திருவிழாவும், 14ஆம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து 15ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்