மதுரை லேக் ஏரியா மற்றும் உத்தங்குடி பகுதி மக்கள் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பயன்பாட்டிற்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த பகுதியில் உள்ள நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் என எப்போது பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும் இந்த பேரூந்து நிறுத்தத்தில், நாள் ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றளர். அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் இந்த பஸ் நிறுத்தத்தை மற்றொரு பகுதிக்கு மாற்றுவதற்கான வேலைகள் நடைபெற்று வந்தது. இதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பகவதி என்பவர் கூறும் போது 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தது. பேருந்து நிறுத்தம் அருகே ஏதோ கட்டிடம் வருகிறது என்பதாலும், தனி நபர் ஒருவருக்காகவும் இந்த பேருந்து நிறுத்தத்தை வேறொரு பகுதிக்கு மாற்றம் செய்கின்றனர்.
இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் எனவே 30 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இந்த பேருந்து நிறுத்தத்தை மாற்றக்கூடாது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்துள்ளோம் அதையும் மீறி பஸ் நிறுத்தத்தை மாற்றினால் மக்களை திரட்டி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுப்போம் என்றார்.
ஆர்ப்பாட்டம் செய்யும் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் கலைந்து சென்றனர்.