தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சை கீழவாசலில் தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் 2025-26-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம். நேற்றுமாலை நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் முரளிகணேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் நமசு ராஜா, மாவட்ட நிர்வாகிகள் ராமநாதன், பெரியநாயகி, உமாபதி, கண்ணன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் முரளிதரன் வரவேற்றார்.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசும்போது, மத்தியஅரசு இந்தியை திணிப்பதாக தி.மு.க.வினர் கூறும் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும். 3-வது மொழியாக மாணவர்கள் தாங்கள் விரும்பும் மொழியை படிக்கலாம். ஆனால் மத்தியஅரசு இந்தியை திணிக்கிறது. நிதி கொடுக்கவில்லை என பொய்யான தகவலை தி.மு.க.வினர் பரப்பி வருகின்றனர்.
இந்தி கட்டாயம் என மத்தியஅரசு எந்த இடத்திலாவது தெரிவித்து இருக்கிறதா?. இல்லை. நிதியையும் வாரி வழங்குகிறது. ஆனால் தேர்தல் வந்துவிட்டாலே பொய்யான தகவலை கூறி போராட்டம் நடத்துவது தி.மு.க.வின் வாடிக்கையாகும். வருகிற 1-ந் தேதி முதல் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து மும்மொழி தேவை என கையெழுத்து இயக்கம் நடத்த இருக்கிறோம். வருகிற சட்டசபை தேர்தலோடு தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் பேசும்போது, மத்தியஅரசு திட்டங்களை வரவிடாமல் தடுத்து தமிழக மக்களை திராவிடமாடல் அரசு வஞ்சித்து கொண்டு இருக்கிறது. இந்தியா முழுவதும் எல்லா மாணவர்களும் சமமான நிலையை அடைய வேண்டும் என்பது புதிய கல்வி கொள்கையின் நோக்கம். மும்மொழி என்பது புதிய கல்வி கொள்கையின் ஒரு சாரம்சம் தான். 3-வது மொழியாக எந்த மொழியை வேண்டும் என்றாலும் கற்கலாம் என்பது தான் புதிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருகிற சட்டசபை தேர்தல் நியாயத்திற்கும், அநியாயத்திற்கும் இடையே நடக்கும் ஜனநாயக போர். இந்த போரில் தி.மு.க. வீழ்த்தப்பட வேண்டும் என்றார்.முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் துரை நன்றி கூறினார்.