அரியலூர், பிப்.18: அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில், மாவட்ட காவல் துறை, குழந்தைகள் மற்றும் மனித கடத்தல் பரிவு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிநடைபெற்றது.


அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் தலைமை வகித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அதனை தடுக்கும் வழிமுறைகள், போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள், போக்சோ சட்டம், குழந்தை திருமணம், இணையவழி குற்றங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து அவர், பெண்கள், பெண் குழந்தைகுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக காவலன் செயலி மூலம் தெரிவிக்குமாறும், அதனை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் மாணவிகளிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியின் போது, இணைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் மணிகண்டன், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறுவளூர்: சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வைத்தார். குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் தமிழரசன் கலந்து கொண்டு மேற்கண்ட கருத்துகளை தெரிவித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமைக் காவலர் வரலட்சுமி, ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, செந்தில்குமரன், வெங்கடேசன், அந்தோணிசாமி, பாலமுருகன், உதவியாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதே போல் மாவட்டத்திலுள்ள பெரும்பாலன அரசுப் பள்ளிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Share this to your Friends