அரியலூர், : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர்களின் பணி அழுத்ததை களைந்திடவும்,போதிய கால அவகாசம், அடிப்படை கட்டமைப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை வழங்கிட வேண்டும். வருவாய்த் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகிய நிலைகளில் ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் தொடர்பான தெளிவான சுற்றறிக்கை வெளியிட வேண்டும்.
பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீள வழங்க வேண்டும். முழுப்புலம் பட்டா மாறுதல் செய்யும் அதிகாரத்தை தலைமையிடத்து துணை வட்டாட்சியருக்கு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாக்கியம் விக்டோரியா தலைமை வகித்து பேசினார். மாவட்ட பொருளாளர் ரமேஷ், இணைச் செயலர் சரவணன், மத்திய செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.