திருச்சி
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை (17/02/2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் துறையூர் மதுராபுரி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் மனு அளித்தனர்.

துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைப்பதாக கடந்த 31 -12 -2024 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைக்க கூடாது என்று பல வழிகளில் மதுராபுரி ஊராட்சி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் திங்கட்கிழமை நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மதுராபுரி ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் எங்களுடைய மதுராபுரி ஊராட்சியில் 450-க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள், ஆதிதிராவிடர் மக்கள் மற்றும் விவசாய சார்ந்த மக்கள் பெருபான்மையாக வசித்து வருகின்றனர்.

மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைப்பதால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் (நூறு நாள்) வேலை பாதிப்பு, பொருளாதார இழப்பு,வரி உயர்வு,சுய உதவி குழுக்கள் மூலம் கிடைக்கும் பயன்கள் பாதிப்பு, விவசாயம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் .ஆகவே துறையூர் நகராட்சியுடன் மதுராபுரி ஊராட்சியை இணைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.இதில் மதுராபுரி ஊராட்சி மீட்பு குழு சார்பாக மகேஸ்வரன், உமாபதி ,தம்பிதுரை ,செந்தில்குமார் ,சுகுமாரன் ,வெங்கடேசன் ,மா.குமார்,பிரசாத் ,மணிமாறன் மற்றும் பிரேம்குமார் மற்றும் 50 க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Share this to your Friends