மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் பார்ம் டிரேடிங்:- நேரடியாக வயல்களுக்கே சென்று அதிகாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி.ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்று பயன்பெற அறிவுறுத்தல்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில்; விவசாயிகளின் விளைபொருட்கள் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் மறைமுக ஏல முறையிலும், பார்ம் டிரேடிங் எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்துக்கே சென்றும் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. தற்போது, சம்பா அறுவடைப் பணிகள் சூடுபிடித்துள்ளது.

செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் செம்பனார்கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடைப் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வயல்களுக்கே சென்று கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செம்பனார்கோயிலை அடுத்த மாத்தூர் கிராமத்தில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் கொள்முதல் பரிவர்த்தனை செய்தனர்.

இதில் சுமார் 400 குவிண்டால் பி.பி.டி ரக நெல் 700 மூட்டைகள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.2300-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2,150-க்கும் சராசரியாக ரூ.2,200-க்கும் கொள்முதல் நடைபெற்றது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சம்பா பருவநெல்லை அறுவடை செய்து, விற்பனை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில் செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் இருப்பிடத்திற்கே வந்து நெல்லை உரிய விலைக்கு நெல் விற்பனை செய்து கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே சுற்றுப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தங்களது விளைபொருட்களை விற்று பயன்பெற வேண்டும் என்றனர்.

Share this to your Friends