புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க முடியும் என்று பேசிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் கடும் கண்டனம்.
சென்னை
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்கும் என ஆணவமாக பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு.தியாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழ்நாட்டு அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதி வழங்கப்படும் என்ற ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களின் பேச்சு ஒட்டுமொத்த தமிழ்நாட்டை கலங்கடித்து இருக்கிறது. ஆசிரியர், மாணவர் சமுதாயத்தை தாண்டி பொதுமக்கள் மத்தியிலும் இது மிகுந்த வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பங்களிப்பு மற்றும் மாநில அரசு பங்களிப்புடன் அனைவருக்கும் கல்வித் திட்டம் ( சர்வ சிக்ஷா அபியான்.SSA) உருவாக்கப்பட்டது அதைத் தொடர்ந்து அத்திட்டம் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமாக(RMSA) மாற்றம் செய்யப்பட்டு இரண்டு அரசுகளின் பங்களிப்பின் மூலம் நடைபெற்று வந்தது.
தற்போது இத்திட்டம் சமக்கிர சிக்ஷா அபியான் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது இதன் மூலம் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றக்கூடிய சுமார் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் இதர பணியாளர்களுக்கு ஊதியம் கலைத் திருவிழாக்கள் மாணவர் நலன் சார்ந்த உதவி திட்டங்கள் பள்ளி வளர்ச்சி காண திட்டங்கள் மற்றும் கட்டுமான வசதிகள் போன்றவை செய்யப்பட்டு வந்தன தொலைநோக்குப் பார்வையோடு இரு அரசுகளும் தனது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் மூலம் இத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு பி எம் ஸ்ரீ என்ற பள்ளிகள் புதிதாக உருவாக்கப்படும் எனவும் இந்தப் பள்ளிகளில் மும்மொழி கொள்கை கடைபிடிக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்து அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என தமிழ்நாட்டு அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் சூழலில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது இந்த பி எம் ஸ்ரீ பள்ளிகளில் தமிழ்நாட்டில் அமல்படுத்திட முடியாது, எந்த வகையிலும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற உறுதியோடு இதுவரை தமிழ்நாடு அரசு அதில் கையொப்பம் இடவில்லை அதை காரணமாக வைத்து தற்பொழுது புதிய கல்விக் கொள்கையை முழுவதுமாக ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க முடியும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
தமிழ்நாட்டில் இரு மொழி கல்விக் கொள்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.மேலும் தமிழ்நாட்டின் கல்வித்தரம் இந்திய ஒன்றியத்திலே முன்னிலையில் உள்ளது.
பல்வேறு கல்வியாளர்கள் முதல் அறிவியல் அறிஞர்கள் வரை தமிழ்நாட்டு இரு மொழி கல்விக் கொள்கையில் பயின்றவர்கள் என்பதை மறந்து விட முடியாது.
தமிழ்நாட்டில் கல்வி, கலாச்சாரம், பண்பாடு, முதலியவற்றை கருத்தில் கொண்டு தாய் மொழியாம் தமிழ் மொழியை பாதுகாத்திடும் நோக்கோடு தமிழகத்திற்கென்று இருமொழி கல்விக் கொள்கை பல ஆண்டுகளாக பின்பற்ற பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் எந்த ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசின் இரு மொழி கல்விக் கொள்கையில் தலையிட்டதில்லை, அவ்வாறு தலையிட்டு வெற்றி கொண்ட வரலாறு இல்லை .
அந்த வகையில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி கொள்கை ஏற்க வேண்டும் எனவும்,அதன் அடிப்படையில் இயங்கும் பி எம் ஸ்ரீ பள்ளிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டால்தான் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கக்கூடிய நிதியை ஒதுக்க முடியும் என்று என்று சொல்லி இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவிலேயே வேறு எந்த முதலமைச்சரும், செய்யாத வகையில் துணிந்து, துணிச்சலோடு தமிழ்நாட்டிற்கு இன்று ஒரு கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைத்து அந்த குழுவின் அறிக்கை தற்போது பெறப்பட்டுள்ளது.
விரைவில் மாநிலக் கல்விக் கொள்கை அறிவிப்பு வெளியிடப்பட உள்ள சூழலில் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எப்படி ஏற்க முடியும்
. ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கும் மும்மொழி கல்விக் கொள்கை, குலக்கல்வி கொள்கை,
3,5.8 வகுப்புகளுக்கு பொது தேர்வு இவற்றையெல்லாம் ஏற்க வேண்டும் என சொல்வதை எப்படி ஏற்க முடியும்.
ஒருபோதும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாது
இந்திய ஒன்றியத்திற்கு அதிக வரி வருவாய் வழங்கும் முதன்மை மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை சர்வதிகார நோக்கத்தோடு ஒதுக்க மாட்டோம் என்று சர்வாதிகாரத்தோடு ஒன்றிய அமைச்சர் சொல்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
இதை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
நாங்கள் உழைத்து எங்கள் உழைப்பின் மூலமாக நாங்கள் செலுத்தக்கூடிய வரி வருவாய் பெருமளவுக்கு பங்கு போட்டு கொண்டு ஆட்சி நடத்துகின்ற ஒன்றிய அரசு எங்களுடைய 40 இலட்சத்திற்கு மேற்பட்ட ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் வாழ்வதாரத்தை கேள்விக்குறியாக்குவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
தமிழ்நாட்டு மாணவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கு வகையில் இது போன்ற வஞ்சக செயலில் ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதால் தற்போது பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.
ஒன்றிய அரசு தொடர்ந்து சர்வாதிகார நோக்கோடு ஏழை, எளிய மாணவர்களின் வாழ்கையில் விளையாடுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் எங்கள் உரிமையான எங்களுக்கு சேர வேண்டிய தொகையை ஒன்றிய அரசு விரைந்து வழங்கிட வேண்டும்.
இதனால் பல நலத்திட்ட உதவிகள், ஆசிரியர்களின் ஊதியம் போன்றவை வழங்க இயலாத சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு இருந்து வருகிறது.
ஒன்றிய அரசு நினைப்பது போல் ஒருபோதும் தமிழ்நாட்டில் மும்மொழி கல்வி கொள்கை ஏற்க முடியாது.
எந்த அடக்குமுறை அச்சுதலுக்கும், தமிழ்நாட்டு முதலமைச்சரும், தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாட்டு மாணவர்களும் அச்சப்பட மாட்டார்கள் என்பதை நாடறியும்.
தமிழ்நாட்டிற்கு வழங்கக்கூடிய நிதியை வழங்காமல் தொடர்ந்து வழங்காமல் தமிழக மாணவர்களை ஒன்றிய அரசு வஞ்சித்தால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரத்தை வலுப்படுத்தக்கூடிய வகையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களை ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை ஒன்றிய அரசுக்கு எதிராக முன்னெடுப்போம்.
அவ்வாறு போராடும் சூழ்நிலைக்கு எங்களை தள்ள வேண்டாம் என்று ஒன்றிய அரசியல் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களையும் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.