தஞ்சாவூர் வங்கிகளில் தேவையான பணி நியமனங்களை உடனே செய்ய தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்ட தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை எதிராக உள்ள ஸ்டேட் வங்கி கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

       ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு உதவி பொது செயலாளர் விஜயராஜன் தலைமை தாங்கினார். வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு செயலாளர் காசிராஜன், கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் வினோத், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த சக்கரவர்த்தி, ஊழியர் சங்கத்தை சேர்ந்த யோகராஜ், வங்கி ஊழியர் கூட்டமைப்பு உதவி தலைவர்கள் புவனா, சொக்கலிங்கம், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தை சேர்ந்த அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் வங்கிகளில் தேவையான பணி நியமனங்களை உடனே செய்ய வேண்டும். தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக்க வேண்டும். வாரத்திற்கு 5 நாட்கள் வேலையை உடனே அமல்படுத்த வேண்டும். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பிளவுபடுத்தும் நிர்வாகத்தின் செயல்களை கண்டிப்பது.

வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும். ஊழியர் நலத்திட்டங்களில் வருமானவரி வசூலிப்பை எதிர்ப்பது. வங்கிகளின் கொள்கை முடிவுகளில் மத்திய நிதித்துறை தலையிடுவதை கண்டிப்பது. 12-வது இருதரப்பு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைகளை உடனே தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு வங்கி அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள், ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Share this to your Friends