பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதே பிரச்சனையை தீர்க்கும் என மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், ‘ தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 14 கல்விஆண்டுகளாக பணியாற்றி வரும், 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர்.
கடந்த 2016 மற்றும் 2021 ஆண்டு தேர்தலின்போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ‘பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம்’ என வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனவே பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதே பிரச்சனையை தீர்க்கும்’ என்றார்.
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் 12 ஆயிரம் பேர், பணி நிரந்தரம் கோரி, பல ஆண்டுகளாக பரிதவித்து வருகின்றனர்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 181 வது வாக்குறுதி, நிறைவேற்றப்படுமா என எதிர்பார்த்து காத்திருகின்றனர்.
தமிழக அரசின் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன்படி, 3 ஆயிரத்து 700 உடற்கல்வி ஆசிரியர்கள், 3 ஆயிரத்து 700 ஓவிய ஆசிரியர்கள், 2 ஆயிரம் கணினிஅறிவியல்,
ஆயிரத்து 700 தையல் ஆசிரியர்கள், 300 இசை ஆசிரியர்கள்,
20 தோட்டக்கலை ஆசிரியர்கள், 60 கட்டடக் கலை ஆசிரியர்கள்,
200 வாழ்வியல் திறன் ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 12 ஆயிரம் பேர் தற்காலிக அடிப்படையில், ரூ.12 ஆயிரத்து 500 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 2012ம் ஆண்டு இந்தப் பணியில் அமர்த்தியது முதல்,
தற்போதுவரை 14 ஆண்டுகளாகவும், மே மாதம் சம்பளம், போனஸ்,
வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, பணிக்காலத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரண நிதி போன்றவை கிடையாது என்ற நிலையில் பரிதவித்து வருகின்றனர். இந்த சொற்ப சம்பளத்தில் வாழ்வாதாரத்திற்கு போராடி வருகின்றனர்.
தற்போது 47 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் தற்காலிகப் பணியிடங்களை பள்ளிக்கல்வித்துறையில் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த காலங்களில் பகுதிநேர ஆசிரியர்கள், பகுதிநேர பணியாளர்கள், தினக்கூலி தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேப் போல், பள்ளிக்கல்வித்துறை மூலம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் தற்காலிகமாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை,
முறைப்படுத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2012ம் ஆண்டு, மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் அப்போது 16 ஆயிரத்து 500 பேர் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். சம்பளம் உயர்வு முதன் முதலில், 2014ம் ஆண்டில் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அப்போது ஆயிரம் காலியிடங்கள் ஏற்பட்டதால், 15 ஆயிரம் பேர் பணியில் இருந்தனர்.
இரண்டாவது முறையாக சம்பளம் உயர்வு கடந்த 2017ம் ஆண்டில் ரூ.700 உயர்த்தி வழங்கப்பட்டது. அப்போது 3 ஆயிரம் காலியிடங்கள் ஏற்பட்டதால், 13 ஆயிரம் பேர் பணியில் இருந்தனர்.
மூன்றாவது முறையாக சம்பளம் உயர்வு, கடந்த 2021ம் ஆண்டில் ரூ.2 ஆயிரத்து 300 உயர்த்தி, ரூ.10 ஆயிரம் மாத சம்பளமாக வழங்கப்பட்டது. அப்போது 4 ஆயிரம் காலியிடங்கள் ஏற்பட்டதால், 12 ஆயிரத்து 500 பேர் பணியில் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலின்போது, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், 181வது வாக்குறுதியாக, பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கோரிக்கை இடம்பெற்றது.
இதன் பின், தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., ஆட்சி நடக்கிறது. இதனால் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்களை பகுதிநேர ஆசிரியர்கள் நடத்தி வலியுறுத்தி வருகின்றனர்.
சட்டசபையில் அனைத்து அரசியல் கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் கவன ஈர்ப்பு கொடுத்து குரல் கொடுத்து வலியுறுத்தி வருகின்றனர்.
மக்கள் மன்றத்திலும் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த 2024ம் ஆண்டில், ரூ.2 ஆயிரத்து 500 சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இதனால் தற்போது மாதம் ரூ.12 ஆயிரத்து 500 சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போதும் காலியிடங்கள் ஏற்பட்டு, 12 ஆயிரம் பேர் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர்.
சம்பள உயர்வுடன் சேர்த்து அறிவித்த ரூ.10 லட்சம் மருத்துவ காப்பீடு அறிவிப்போடு உள்ளது. இன்னும் நடைமுறைக்கு வரவில்லை
மே மாதம் சம்பளம், பொங்கல் போனஸ், இ.பி.எப்., இ.எஸ்.ஐ., குடும்ப நலநிதி உள்ளிட்ட எதுவுமே கடந்த காலங்களில் வழங்கப்படவில்லை.
பகுதி நேர ஆசிரியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி, கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், எதிர்கால வாழ்வாதாரத்தை எண்ணி, மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.
தற்போது, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஓபிஎஸ் அதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புரட்சி பாரதம், எஸ்.டி.பி.ஐ., தேமுதிக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
வருகின்ற பட்ஜெட்டில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம் விடியலை முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிபடி வழங்க வேண்டும். வழங்குவாரா? முதல்வர் ஸ்டாலின்.
—
S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
Cell : 9487257203