தரங்கம்பாடி அருகே புகழ்பெற்ற திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. முசுகுந்த சக்கரவர்த்தியால் அமைக்கப்பட்ட இந்த ஆலயம், சூரபத்மனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரணை கொன்ற பாவம் நீங்க குரா மரத்தடியில் முருகப்பெருமான் சிவபூஜை செய்து பாவ விமோசனம் பெற்ற இடம் என்று தலபுராணம் கூறுகின்றது.

பண்டைய தமிழ் நூல்களில் குராவடி என்ற பெயரில் வழங்கப்படும் இந்த ஆலயம், முருகனுக்கு உரிய பாவம் கழிந்ததால், திருவிடைக்கழி என்று அழைக்கப்படுகிறது .தமிழகத்தின் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு பால், தேன், சந்தனம், விபூதி, பன்னீர் பல்வேறு வாசனை திரவியங்கள், கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி, சுவாமிமலை, சிக்கல், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து இன்று காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Share this to your Friends