தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.சி.சண்முகையா எம்எல்ஏ மீது சமூக வலைதளங்களில்அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பில் வழக்குரைஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
கொடியங்குளம், கைலாசபுரம், வேலாயுரதபும், கூட்டுடன்காடு, முடிவைத்தானேந்தல், கருங்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழக்குரைஞர் லாரன்ஸ் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த மனு:
தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற சிலை கடத்தல் விவகாரத்தில் ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேரை திருநெல்வேலி மண்டல சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸôர் கைது செய்தனர். இச்சிலை கடத்தல் சம்பவத்தில் ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கைதானவர்கள் தெரிவித்ததாக சமூக வலை தளத்தில் அவதூறு பரப்பி வருகின்றனர். இது மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதன்காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் நிலவுகிறது.
எனவே, உண்மைக்கு புறம்பான அவதூறு செய்திகளை உருவாக்கி எம்எல்ஏவுக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.