காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய இளங்கலை பட்டப்படிப்பு பயில்வதற்காக கடந்த ஆண்டு சேர்ந்த 92 மாணவ மாணவியர் , வேளாண் விரிவாக்கத்தின் அடிப்படைகள் என்ற பாடத் திட்டத்தை அக்கல்லூரியின் இணை பேராசிரியர் டாக்டர் எஸ். அனந்த்குமார் தலைமையில் பயின்று வருகின்றனர்.

விவசாயிகளுக்கு எப்படி எல்லாம் விரிவாக்கம், சேவை மற்றும் உதவிகள் செய்யலாம் என்பதை கற்றுக் கொள்ளும் நோக்கத்தில், விவசாயம் மற்றும் உழவர் நல துறையை நேரில் சென்று பார்வையிட்டு அதை பற்றி பயில்வது இந்த பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
அதற்கான உரிய அலுவல் வழியில் காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் திரு. ஆர். கணேசன் அவர்களின் ஒப்புதல் பெற்று, மேலும், திட்டங்களை பட்டியலிட்டு அவற்றுக்கேற்ப நிபுணத்துவம் பொருந்திய அதிகாரி மற்றும் அலுவலர்கள் தேர்ந்தெடுத்து பயிற்சி வடிவமைத்து கொடுத்தார் திரு. ஆர். கணேசன்.
அதை தொடர்ந்து, துணை வேளாண் இயக்குநர் முனைவர் ஜெயந்தி அவர்கள் கடந்த 1974 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பயிற்சி மற்றும் சந்திப்பு அணுகுமுறையில் நடத்த பழைய விரிவாக்கத் திட்டத்திற்கு பதில், தற்போது மாவட்ட ஆட்சியர் தலைமையில் நன்றாக செயல்படும் 2018 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த ஆட்மா என்று அழைக்கப்படும் விவசாய தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம் பற்றி விரிவாக விளக்கினார்.
அவரை தொடர்ந்து வேளாண் அலுவலர் திருமதி மேரி ஜூலியட் அவர்கள் மத்திய மாநில உழவர் நலத் திட்டங்களை எடுத்துரைத்தார். குறிப்பாக பிரதம மந்திரி வேளாண்மை பாசன திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக திட்டம், மண்வள அட்டைப்பட திட்டம், பிரதம மந்திரி கிசான் திட்டம் ஆகியவற்றை தெரிவித்தார்.
மேலும், வேளாண் அலுவலர் திரு ஆர்.சரவணன் அவர்கள் மத்திய அரசின் தேசிய தோட்டக்கலை திட்டம் மற்றும் மாநில அரசின் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு திட்டம் பற்றி தகவல் பகிர்ந்தார்.
அடுத்து, வேளாண் அலுவலர் திருமதி. ஷர்மிளா அவர்கள், இத்திட்டங்களை கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் விவசாய பட்டப்படிப்பின் போது கடுமையாக பயிற்சி பெறுவதால் வேளாண் அலுவலர் விட உயர்ந்த பதவிகள் பெறலாம். அதனாலேயே, தனது மகளை வேளாண் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்த்ததாக ஒரு நல்ல முன்மாதிரியாக ஊக்கம் ஊட்டும் வகையில் பேசினார்.
பிறகு, வேளாண் அலுவலர் திரு. அலென் அவர்கள் , விவசாய துறை மீது சிலர் குற்றச்சாட்டுகள், அதிருப்தி மற்றும் குறைபாடுகள் கூறினாலும், வேறு சில மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் விவசாயிகளின் பொருளாதாரத்தை அரசு பாதுகாக்கும் விதமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த படுவதால் தற்கொலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை இங்கு இல்லை. நம் மீது அவதூறு பரப்ப பட்டாலும் மனம் தளராமல் நமது விவசாயிகளின் நலனுக்காக நாம் தொடர்ந்து விரிவாக்கப்பணிகள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாணவிகள் ஐஸ்வர்யா மற்றும் ஜெயம் பயிற்சியின் தகவல், தரவுகளை ஆவணப்படுத்தினர்.
சதாசிவம், திருவிக்ரமன், சுபாஷினி.எம் மற்றும் அபூர்வா களப்பணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முன்னதாக மாணவி சுபாஷினி.ஆர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவி அட்சயா நன்றியுரைத்தார்.