பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகிலுள்ள கோடாலி கருப்பூர் வடக்கு தெருவில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில், சித்திரை மாத விழாவை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் பக்தி நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஆண்டு நிகழ்ச்சியில், வழக்கம்போல் பக்தர்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிவித்து கொண்டுசெல்லும் மரபினை தொடர்ந்தனர். அதன் பின்னர், கோடாலி கருப்பூர் வடக்கு தெருவில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மனை தரிசிக்கவும், நேர்த்திக்கடன் செலுத்தவும் பக்தர்கள் பெருந்திரளாக கூடியிருந்தனர்.
பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள், இறைநம்பிக்கையின் உச்சத்தில், சிலர் அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர். 50 க்கும் மேற்பட்டோர் கொண்டு வந்த பால், அம்மனுக்கு அபிஷேகமாக அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது பக்தர்கள் “ஓம் சக்தி… பராசக்தி…” என முழங்கியபடி, மகா மாரியம்மனை ஆழ்ந்த பக்தியுடன் வழிபட்டனர்.
அபிஷேகத்திற்குப் பின்னர், அம்மன் மலர் அலங்காரத்தில் அழகுறக் கட்டப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலிக்க காட்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து, தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள், தீபாராதனையில் கலந்து கொண்டு, அம்மனின் அருளைப் பெற்றனர்.
இரவு நேரத்தில், சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் வீதியுலா நடைபெற்றது. கோயில் சப்பர வாகனத்தில் எழுந்தருளிய அம்மன், பக்தர்களால் பஜனை, மங்கள இசை, தீப்பந்தம் உள்ளிட்ட ஏற்பாடுகளுடன் கோடாலி கருப்பூர் வடக்கு தெருவில் உலா வந்தார். வீதிகள் முழுவதும் பக்தர்கள் அம்மனை சிறப்பு அலங்காரங்களுடன் வரவேற்று, தங்கள் வீடுகளில் வழிபாடு நடத்தி வணங்கினர்.
இந்த விழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமன்றி சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர். பக்தர்களின் பக்தி, ஒருமைப்பாடு மற்றும் ஆன்மிக ஒளியால் நிறைந்த இந்நிகழ்வு, பக்தர்கரங்களில் இன்ப அனுபவமாகும் வகையில் அமைந்தது.