துறையூரில் 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நிழற்குடைகள் பயனின்றி தவிக்கும் பயணிகள்-சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் நிழல்குடை இல்லாமல் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். துறையூர் பேருந்து நிலையத்தில் இருந்து முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா வழியாக முசிறி, கரூர் , திண்டுக்கல்,பழனி மற்றும் தாபேட்டை, நாமக்கல் ,ஈரோடு,கோவை , ஊட்டி செல்லும் பேருந்துகள் சென்று வருகின்றன.

அதே போல் திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளில் அதிக அளவில் பயணிகள் சென்று வருகின்றனர். திருச்சி ரோட்டில் மின்சார வாரிய அலுவலகம் முன்புறம் முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது 2012 -13ம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 6.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை முன்பு பேருந்துகள் நிற்காமல் ரவுண்டானா அருகில் நிற்பதால் பயணிகள் இன்றி பயனற்ற நிலையில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது.

அங்கு பேருந்துகளும் நிற்பதில்லை.இதே மதிப்பீட்டில் ரவுண்டானா கிழக்கு புறம் கட்டப்பட்ட நிழற்குடை இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
இப்படி மக்களின் வரிப்பணம் வீணாகி உள்ளது.திருச்சி,முசிறி மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் தாய்மார்கள்,கர்ப்பிணி பெண்கள், பள்ளி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பேருந்து நிழற்குடை இல்லாமல் வெயிலிலும் மழையிலும் நின்று அவதிப்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது சம்பந்தமாக அதிகாரிகளிடமும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும் பல முறை கோரிக்கை வைத்தும் யாரும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் ஆதங்கம் படுகின்றனர்.

எனவே வெயிலின் கொடுமையான தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு முசிறி பிரிவு ரோடு ரவுண்டானாவில் இரண்டு மார்க்கங்களில் தற்காலிக நிழல் குடை அல்லது பசுமை பந்தல் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?.. பொறுத்திருந்து பார்ப்போம்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *