மாணவர்கள் கோடை விடுமுறையை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எழுத்தாளரும், தென் குவளவேலி அரசு உயர்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியருமான ஆதலையூர் சூரியகுமார் அறிவுறுத்தியுள்ளனர்.
மாணவர்களிடம் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கல்வியாளரும், தினகரன் குழுமம் சூரியன் பதிப்பகம் வெளியிட்டுள்ள “நிற்க அதற்குத் தக கற்க” என்ற நூலின் ஆசிரியருமான முனைவர் ஆதலையூர் சூரியகுமார் கும்பகோணத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனை சந்தித்து “நிற்க அதற்குத் தக கற்க ” என்ற நூலை வழங்கினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:- மாணவர்கள் தங்களது தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கும், நேர்முகத் தேர்வு, சொல் அரங்கங்கள் போன்றவற்றில் வெற்றி பெறுவதற்கும், தங்கள் ஆளுமையை வெளிப்படுத்துவதற்கும் வாசிப்புத் திறன் மிகவும் அவசியமாகும். அலைபேசியின் வருகைக்குப் பிறகு மாணவர்களிடையே புத்தக வாசிப்பு என்பது குறைந்திருக்கிறது.
தமிழக அரசு மாணவர்களிடையே வாசிப்பை மேம்படுத்துவதற்காக “வாசிப்பு இயக்கம் ” என்பதை பெரிய அளவில் முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களிடம் வாசிப்பு திறன் அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரிடம் நான் எழுதி தினகரன் குழுமம் சூரியன் பதிப்பகம் வெளியிட்டுள்ள “நிற்க அதற்குத் தக கற்க ” என்ற கல்வி நூல் வழங்கப்பட்டது.
தற்போதைய கல்விச் சூழலின் நிலை, மாணவர்கள் கைக்கொள்ள வேண்டிய இலக்குகள், எளிமையாக படிக்க வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றை வலியுறுத்தும் இந்த நூல் ஏற்கனவே தொடராக வந்த போது பெரும் வரவேற்பு பெற்றது.
அந்த வகையில் மாணவர்களின் கோடை வாசிப்புக்கு இது ஒரு முக்கியமான நூல், அந்த அடிப்படையிலும் அமைச்சரிடம் நூல் வழங்கப்பட்டது. மேலும் அமைச்சர் பெருமக்கள், கல்வித் துறை உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் ஆகியோர்களுக்கு நூல் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.