மதுரை மூட்டா அரங்கத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கல்வி மாவட்டச்செயலாளர் தனபாக்கியம் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள்தாஸ், மாவட்டத் துணைச் செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
மாநிலச் செயலாளர் ஜெயராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கடந்த ஆறு மாநில மாநாடுகளின் தாக்கத்தை குறித்து பேசினார். மாவட்டச்செயலாளர் சீனிவாசன் 7-வது மாநில மாநாட்டின் முழக்கங்களான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பாதுகாப்போம், தேசிய கல்விக் கொள்கை 2020ஐ நிராகரிப்போம். கட்டாய இந்தி திணிப்பை எதிர்ப்போம். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த காலங்களில் இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம் உள்ளிட்ட முழக்கங்கள் குறித்து விளக்கிப் பேசி மே மாதம் 3-ம் தேதி நடைபெறும் பொது மாநாட்டிலும் 20,000 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ள பேரணியில் மதுரை மாவட்டக்கிளையின் சார்பில் 500 பெண் ஆசிரியர்கள் சீருடையில் பங்கேற்பது குறித்து உறுதி செய்தார்.
மேலும் ஏழாவது மாநில மாநாட்டினை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி அலுவலகங்களிலும் மாநாட்டின் முழக்கங்கள் அடங்கிய விளம்பர பேனர்கள் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்தல், நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் பார்வையில் கவனிக்கத்தக்க வகையில் சுவர் விளம்பரங்களை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட மாநாட்டுப் பணிகள் குறித்து பேசினார். கூட்ட இறுதியில் மாவட்டப் பொருளாளர் எமிமாள் ஞான செல்வி 7-வது மாநில மாநாட்டிற்கு மதுரை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநாட்டு நிதியை மாநிலச்செயலாளர் ஜெயராஜிடம் வழங்கி நன்றி உரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.