வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். ஹெலிகாப்டரில் மலர் தூவப்பட்டதால் பக்தர்கள் பரவசம்:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்காவில் அட்டவீரட்ட தலங்களில் 6-வது தலமான வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில் உள்ளது. தாருகாவனத்து முனிவர்கள் சிவனுக்கு எதிராக நடத்திய வேள்வியில் தோன்றிய யானையை சிவன்மீது ஏவிவிட, சிவபெருமான் அந்த யானையை அழித்து, அதன் தோலை போர்த்தி கொண்டு வீரச்செயல் நிகழ்த்திய தலமான இக்கோயிலில் சிவபெருமான் கஜசம்ஹார மூர்த்தியாக விளங்குகிறார்.
இந்துசமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட இக்கோயிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. விழா கடந்த 1-ஆம் தேதி முதல்கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

கும்பாபிஷேக தினமான காலை 6-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில்; சுமந்து, கோயிலை சுற்றிவந்து, விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேளதாளம் ஒலிக்க, வான வேடிக்கைகள் முழங்க மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக நேரத்தில் போது கோயிலின் மேலே திடீரென ஹெலிகாப்டர் பறந்ததை ஆச்சரியமாக பக்தர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே, ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.