திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆடுகள் மட்டுமின்றி கோழிகள், கட்டுச் சேவல்கள் கண்வலிக்கிழங்கு, பழு பாவற்காய், சீத்தாபழம் உள்ளிட்ட அரியவகை காய்கறிகளும் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 8 மணிவரை சந்தை நடைபெறும்.


திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் அய்யலூர் சந்தைக்கு விற்பனைக்கு ஆடுகளை கொண்டு வருவார்கள். தற்போது ரம்ஜான் பண்டிகைக்கு நோன்பு வைத்துள்ள நிலையில் தற்போதே வியாபாரிகள் ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இன்று 10 கிலோ எடைகொண்ட ஆடு ரூ.6500 முதல் ரூ.7000 வரை விற்பனை ஆனது. தரமான நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.400ம், கட்டுச் சேவல்கள் ரூ.3500 முதல் ரூ.7000 வரை விற்பனையானது. தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை குறைந்த போதும் வரும் வாரங்களில் மேலும் விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.


அய்யலூர் ஆட்டுச்சந்தை சாலையிலேயே நடப்பதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சந்தை நடத்தும் உரிமையாளர் வசூலில் மட்டுமே தீவிரம் காட்டி வரும் நிலையில் போக்குவரத்து நெரிசலை கண்டு கொள்வதில்லை. எனவே சந்தையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

வாரச்சந்தையில் போதிய மின்விளக்கு, குடிநீர், கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடம் இல்லாததால் சந்தைக்கு வரும் வியாபாரிகள் வேதனை அடைகின்றனர். வருடத்திற்கு சுமார் ரூ.80 கோடிக்கு விற்பனையாகும் சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் அடிக்கடி திருட்டுச் சம்பவங்களும் நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது.


மேலும் சந்தைக்கு வரும் வியாபாரிகளை குறிவைத்து சூதாட்ட கும்பலும் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது பங்குனி திருவிழா மற்றும் ரம்ஜான் பண்டிகைக்காக ஆடுகள், கோழிகள், சேவல் விற்பனையாகி வரும் நிலையில் விவசாயிகள், வியாபாரிகள் பல்வேறு குறைபாடுகளை கூறி நொந்து செல்லும் நிலையிலேயே உள்ளனர்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *