மயிலாடுதுறை செய்தியாளர்
இரா.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீ ஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக அப்பகுதியில் கடை வீதியில் கடைகள் வணிக வளாகங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் அங்கு உள்ள தனியார் பேக்கரி உரிமையாளர் கண்ணன் என்பவர் வாடகை நிலுவைத் தொகை 12 லட்சத்திற்கு மேல் பாக்கியுள்ளதாக கூறி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கண்ணன் இடத்தை கையகப்படுத்துவது தொடர்பான பிரச்சனை இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்து சமயஅறநிலையத்துறை துணை ஆணையர் ராணி தலைமையில் ஆலய செயல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பிரச்சனைக்குரிய கடையை சீல் வைக்க முயற்சி செய்தனர்.
அப்போது அடிமனைபயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இந்த பிரச்சனை தொடர்பாக ஆர்டிஓ விசாரணையில் இருக்கும் பொழுது எப்படி சீல் வைக்கலாம் என்று அதிகாரிகளை சுற்றி வளைத்து கேள்வி எழுப்பினர். வணிகர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கடைக்காரருக்கு ஆதரவாக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொழுது, மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் கடுமையாக கைகளால் தாக்கி கொண்டனர்.
தொடர்ந்து அங்கு இருந்த நாற்காலிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் தனித்தனியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில் காவல்துறையை பாதுகாப்புக்கு அழைக்காமலேயே இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கடையை சீல் வைக்க முயன்றபோது மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.