இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் பொது மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் திடிர் என இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் கொட்டி தீர்த்தது.
இதனால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். முதுகுளத்தூர் பேரூராட்சியில் பல வருடங்களாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாத மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பேருந்து நிலையும், சாலை ஓரங்களில், கழிவுநீருடன் மழைநீர் கலந்து குளம் போல் தேங்கியது.
இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தேங்கிய தண்ணீரை பேரூராட்சி நிர்வாகம் வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். கழிவுநீர் கால்வாய் கட்டப்படாத தெருக்களில் கால்வாய்கள் கட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.