எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 70}க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட 24வார்டுகளிலும் நாள்தோறும் வீடுகள்,கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம்பிரித்து நகராட்சி குப்பைகிடங்கில் வாகனங்கள் மூலம் கொண்டு சென்று கொட்டுகின்றனர்.
இதனிடையே கடந்த பிப்ரவரி மாதத்திற்கான சம்பளம் இது வரை வழங்கப்படவில்லை எனக்கூறி தூய்மை பணியாளர்கள் தனியார் ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, நகராட்சி நிர்வாகம் தரவேண்டிய பாக்கித்தொகை இருப்பதால் நகராட்சி நிர்வாகம் தான் சம்பளத்திற்கான பணம் தரவேண்டும் எனவும், நகராட்சி தரப்போ தனியார் ஒப்பந்ததாரிடம் கடந்த மாதத்திற்கான தொகை ஒரு கட்டமாக காசோலை தரப்பட்டு விட்டதாகவும் கூறியதால் அலைகழிப்புக்கு ஆளாகிய தூய்மைபணியாளர்கள் வியாழக்கிழமை நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், நகராட்சி நிர்வாகம் சம்பளநிலுவை வழங்கிட உறுதியளித்தனர்.
ஆனால் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை சம்பள நிலுவை தொகை வழங்கப்படாததால் வேதனையடைந்த தூய்மை பணியாளர்கள் மீண்டும் மயிலாடுதுறை}சிதம்பலம் நெடுஞ்சாலையில் தமிழிசை மூவர் மணிமண்டபம் முன்பு தனியார் ஒப்பந்ததாரர் அலுவலகம் எதிரே திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.
தகவல் அறிந்து வந்த மதுவிலக்கு காவல்ஆய்வாளர் ஜெயா,காவல் உதவிஆய்வாளர் காயத்திரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி நகராட்சி அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தை மேற்கொண்டு சம்பளநிலுவை கிடைத்திட உறுதியளித்தனர். இதனையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Leave a Reply